Thursday, 9 January 2014

உழவின் சிறப்பு

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்

தொழுதுண்டு பின் செல்வர்"

என்று  திருவள்ளுவர் திருக்குறளில் உழவின் பெருமையை கூறி உள்ளார்.

சங்கத் தமிழர் காலத்தில் உழவுத் தொழில் அதன் சிறப்பை எட்டியது. சமூகத்தின் தலையாய தேவையாக உழவு சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே உழவரை சமூக படிமுறையில் முதலில் வைத்து பண்டைய இலக்கியங்களில் உயர்வு செய்யப்பட்டுள்ளது.

பண்டைய தமிழர்கள் மண்ணின் பல்வேறு வகைகளை அறிந்தவர்கள். எந்த மண்ணில் எந்த பயிர் செய்ய முடியும் என்று அறிந்து வைத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பொருத்தமான நீர்ப்பாசன முறைகளை தெளிவுடன் கடைபிடித்து வந்தனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைப் பாகுபாட்டில், மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடங்களாகும். புலவர்களின் பாடல்களின் படி இந்த நிலப்பகுதியில் உழவுத் தொழிலுடன் கூடிய உயர் நாகரீக பண்பாடு இருந்து வந்துள்ளதை நாம் அறியலாம்.

உழவர்கள் தங்கள் மேல் பூந்தாது படிய காஞ்சி மரக்கிளையை வளைப்பதும், ஒற்றை ஏருடைய உழவன் ஈரம் உண்டான நிலத்தில் விதைக்க விரைவதுமாகிய செய்திகள் குறுந்தொகையில் உள்ள மருத நில பண்பாட்டை வர்ணிக்கும் பாடல்களில் உள்ளது.
அதேபோல் மலையும் மலை சார்ந்த இடமுமாக கூறப்படும் குறுஞ்சி நிலத்தில் தினை, ஐவனம் முதலியவற்றை விதைத்து அருவி நீரால் விளவிப்பார்கள் என்று இலக்கிய ஆதாரங்கள் கூறுகின்றன. பருப்புக்காக மொச்சையையும், உடைக்காக பருத்தியையும் விளைத்து உண்ண, உடுக்கவென்று தன்னிறைவுடன் வாழ்ந்து வந்துள்ள செய்திகள் பண்டைய தமிழர் பண்பாடு நெடுக நமக்கு காணக்கிடைக்கிறது.

நிலங்களை அதன் வள ஆதாரங்களுக்கேற்ப வன்புலம், மென்புலம், பின்புலம் என்று வகை பிரித்து வைத்திருந்தனர். உப்பு நிலத்தை களர் நிலம் அல்லது உவர் நிலம் என்று தனியாக பிரித்து வைத்திருந்தனர்.

நெல், கரும்பு, தானியப் பயிர்கள், மிளகு, தேங்காய், அவரை, பருத்தி, புளி சந்தனம் என்று அனைத்து வகைகளையும் இவர்கள் உற்பத்தி செய்துள்ளனர். நெல்லிலேயே வெண்ணெல், செந்நெல், புதுநெல் என்று வகைபிரித்திருந்தனர். முல்லை நில மக்கள் பழங்களையும், கால் நடைகளுக்கான தானியங்களையும் உற்பத்தி செய்தனர்.


--தொடரும் 


Lets start...